திருமகள் திருமாலை அடைய விரும்பி சிவபூசை செய்து விருப்பம் நிறைவேறப் பெற்றமையால் திருவாஞ்சியம் என்று பெயர் பெற்றது. காசிக்கு ஒப்பானக் கருதப்படும் ஆறு தலங்களுள் இத்தலமும் ஒன்று. திருவெண்காடு, திறுவையாறு, மயிலாடுதுறை, திருவிடைமருதூர், திருச்சாய்க்காடு ஆகியவை மற்ற தலங்கள்.
மூலவர் 'வாஞ்சிநாதர்' என்னும் திருநாமத்துடன், சற்று உயர்ந்த பாணத்துடன், பெரிய அளவிலான லிங்க வடிவில் காட்சியளிக்கின்றார். அம்பாள் 'மங்கள நாயகி என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.
பிரகாரத்தில் விநாயகர், வள்ளி, தேவசேனை சமேத சுப்பிரமண்யர், பஞ்சபூத லிங்கங்கள், ஜேஷ்டாதேவி, சனிபகவான் மற்றும் அறுபத்து மூன்று நாயன்மார்களும் காட்சி தருகின்றனர்.
எமனுக்குத் தனி சன்னதி உள்ள தலம். எமதர்மராஜன், உலக உயிர்களைக் கவர்வதால் தனக்கு ஏற்படும் பாவம் நீங்க வழி தேடி தலங்கள் தோறும் சென்றார். கடைசியாக திருவாரூர் தியாகேசப் பெருமானிடம் வேண்டினார். அவரோ, "ஸ்ரீவாஞ்சியம் வா" என்று கூற, எமதர்மனும் அங்கு சென்று ஸ்ரீவாஞ்சிநாதரை தரிசித்து, பாவச்சுமையில் இருந்து விடுபட வேண்டினார். ஸ்ரீவாஞ்சிநாதர் எமதர்மனிடம், "என்னுடைய இந்த தலம் உலக உயிர்களின் ஜீவன். இந்த உலகத்தை இயக்குபவன் நானே! இதில் உன் செயல் ஒன்றும் இல்லை. எனவே, உன்னை பாவம் வந்து சேராது" என்று கூறினார்.
இதைக் கேட்ட எமதர்மராஜன் மனம் உருக இறைவனை பலவாறு போற்றித் தொழுதார். ஸ்ரீவாஞ்சியத்தில் இறைவனுக்கு தான் எப்போதும் ஷேத்திர பாலகராக இருக்க வேண்டும் என்றும், மாசி மாதம் பரணி நட்சத்திரத்தன்று தன்னையே வாகனமாகக் கொண்டு இறைவன் உலா வந்தால், இறைவனைச் சுமக்கும் தனக்கு உலக உயிர்களைக் கொல்லும் பாவம் நீங்கும் என்றும், ஸ்ரீவாஞ்சியத்திற்கு வந்து வழிபடுவோர் உயிர் பிரியும்போது நேரே சிவலோகம் செல்லுகின்ற பாக்கியத்தையும் அருள வேண்டும் என்றும் வேண்டினார். இறைவனும் எமதர்மராஜன் கேட்ட வரங்களை அருளினார். மேலும், தன்னை வழிபட வருபவர்கள் முதலில் குப்த கங்கையில் நீராடி எமதர்மராஜனை வழிபடலாம் என்றும் அருளினார்.
இத்தலத்துக்கு வந்து குப்த கங்கையில் நீராடி வாஞ்சிநாதரையும், எமதர்மராஜனையும், வழிபட்டால் சகல நோய்களும் நீங்கி, நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும் கிடைக்கும். நவதீர்த்தங்களைக் கொண்டுள்ள இக்கோயிலில் குப்த கங்கை மிகவும் சிறப்பு வாய்ந்தது. கங்கையில் மூழ்கி தங்கள் பாவத்தைப் போக்குவதால் தனக்கு ஏற்படும் பாவத்தைப் போக்க என்ன செய்யலாம் என்று சிவபெருமானிடம் கங்கை வேண்டினாள். அவரும், தான் மிகவும் விரும்பி இருக்கும் இடமும், பிரளய காலத்திலும் அழிவில்லாத தலமுமான ஸ்ரீவாஞ்சியம் தலத்திற்கு வந்து உன் பாவங்களைப் போக்கிக் கொள்ளலாம் என்று தெரிவித்தார். கங்கையும் இத்தலத்தில் குப்த கங்கை என்னும் தீர்த்தமாக எழுந்தருளியுள்ளாள். எனவே, இத்தலத்திற்கு வந்து குப்த கங்கையில் நீராடி இறைவனுக்கு அபிஷேகம் செய்து, ஆயுள் விருத்தி ஹோமம், தில (எள்) ஹோமம் ஏதேனும் செய்து நெய்தீபம் ஏற்றி அன்னதானம் வழங்கினால் சகல பாவங்களும் தீரும்.
இத்தல பைரவர் யோக பைரவராக தரிசனம் தருகின்றார். இங்குள்ள மகிஷாசுரமர்த்தினி மிகவும் சக்தி வாய்ந்தவளாக வணங்கப்படுகின்றாள். அதுமட்டுமல்ல இறைவனே எல்லாமுமாக இருப்பதால் நவக்கிரக சன்னதி இல்லை. ஆனாலும் ஒரே கல்லில் செய்யப்பட்ட இராகு-கேது மட்டும் உள்ளனர்.
இத்தலத்தில் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு நீராடுவது சிறப்பு. அதிலும் கடைசி ஞாயிறு அன்று விஷேசம். கடைஞாயிறு திருவிழா என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
பிரம்மா, சூரியன், பராசர முனிவர், அத்திரி மகரிஷி, எமதர்மன் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர்.
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
திருஞானசம்பந்தர் 2 பதிகங்களும், திருநாவுக்கரசர் 2 பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர். திருவாசகத்திலும் இடம் பெற்றுள்ள தலம்.
இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். தொடர்புக்கு: நிர்வாக அதிகாரி, தொலைபேசி - 04366-228305
|